Saturday 25 May 2019

சனி பகவானுடன் ஓர் கலந்துரையாடல்: பகுதி -7 (நிறைவு பகுதி )


சனி பகவானுடன் ஓர் கலந்துரையாடல்:
பகுதி -7  (நிறைவு பகுதி )
ஜாதகர் : ஏழரை மற்றும் அஷ்டமத்து சனியில் எந்த ராசிக்கு மிகுந்த சிரமத்தை கொடுப்பீர்கள் ?
சனி : எனது ஜென்ம விரோதிகளான சூரிய , சந்திரரின் ராசியான சிம்மம் , மற்றும் கடகதிற்கும் , மற்றொரு பாவ கிரகமான செவ்வாயின் ராசிகளான மேஷம் , மற்றும் விருச்சிகதிற்கும் மிகுந்த சிரமத்தை கொடுப்பேன்.
ஜாதகர் : மற்ற ராசிகளுக்கு நன்மை செய்வீர்களா ?
சனி : எனது ராசியான மகர , கும்பதிற்கும், எனது நண்பரான புதன் மற்றும் சுக்கிரன் ராசிகலான மிதுனம் , கன்னி , ரிசபம் , துலாதிற்கும் தீமையை குறைத்து செய்வேன் . அதாவது ஒரு தந்தையானவர் தன் பிள்ளைகளின் நலனுக்காக சில நேரங்களில் எவ்வாறு கடிந்து கொள்வாரோ அதை போலவே நானும் செய்வேன் . சுருக்கமாக சொன்னால் விருச்சிக ராசியினைரை நான் இரும்பு பந்தால் அடித்தால் , எனது மற்றும் எனது நண்பர்களின் ராசிகரர்களை பூ பந்தால் அடிப்பேன் . இரும்பு பந்தால் அடி வாங்குவதற்கும் பூ பந்தால் அடி வாங்குவதற்கும் வித்தியாசம் உள்ளது அல்லவா ?
ஜாதகர் : ஆம் புரிகிறது சனி பகவனே . அது சரி  தனசு மற்றும் மீன ராசியினர் பற்றி சொல்லவில்லையே ?
சனி : சொல்கிறேன் . குருபகவான் எனக்கு நட்பும் இல்லை , பகையும் இல்லை . அவர் எனக்கு சமமானவர் . மேலும் நான் தனசு மற்றும் மீன ராசியல் “சுபத்துவம்” அடைவேன் . அதனால் இந்த ராசியினருக்கும் தீமையை குறைத்து செய்வேன் .
ஜாதகர் : ஜென்ம மற்றும் அஷ்டமத்து சனியின்  தாக்கத்தில் உள்ள அனைவரும் சிரமப்படுவதில்லையே? ஏன் இந்த பாகுபாடு?
சனி : ஒருவருடைய ஜாதகத்தில் நான் “சுபத்துவ மற்றும் சூட்சம வலு”  அடைந்து இருந்தாலும் , அல்லது நேர் வலு இழந்து இருந்தாலும், யோக தசை நடை பெற்று இருந்தாலும்  ஜென்ம மற்றும் அஷ்டமத்து சனியின் தாக்கம் குறையும் .
ஜாதகர் : அஷ்டமத்து மற்றும் ஏழரை சனியின் போது எந்த கிரகத்தின் தசை நடை பெற்றால் மிகுந்த துன்பத்தை கொடுப்பீர்கள்?
சனி : இலக்கின அசுபரின் தசை அல்லது புத்தி  நடை பெற்றாலும் , குறிப்பாக அஷ்டமாதிபதி தசை அல்லது புத்தி நடை பெற்றாலோ, எல்லாவற்றிற்கும் மேலாக சந்திர தசை அல்லது புத்தி நடைபெற்றால் மிகுந்த சிரமத்தை கொடுப்பேன் . அதுவும் நீச சந்திரன் என்றால் சொல்லவே தேவை இல்லை, சொல்லில் அடங்காத துயரத்தை கொடுப்பேன் .
ஜாதகர் : தசா, புத்திக்கு அப்பாற்பட்டு ஏழரை மற்றும் அஷ்டமத்து சனியின் போது உங்களின் தாக்கம்  குறைய வழி உள்ளதா?
சனி : நிச்சயம் உள்ளது . கோச்சாரத்தில் நான் சுப கிரகங்களின் தொடர்பை பெற்று நான்  “சுபத்துவம்” அடையும்போதும், கேதுவுடன் இனைந்து “சூட்சம வலு” அடையும்போதும் எனது தாக்கம் குறையும் .
ஜாதகர் : ஒருவர் ஏழரை மற்றும் அஷ்டமத்து சனியில் இருந்து தன்னை  காத்து கொள்ள என்ன செய்ய வேண்டும் ?
சனி :  1. எங்களை  படைத்த ஈசனிடம் முழு சரணாகதி அடைதல் .   
      2.தினமும் கோளறு பதிகத்தை பக்தியோடு பாடுதல் .
      3. எனது குருநாதரான  காலபைரவருக்கு மண் அகலில் நல்லண்ணை தீபம் இடுதல் .
      4. சனிக்கிழமை தோறும் அஞ்சனை மைந்தனான அனுமனை தரிசனம் செய்தல் .
      5. தினம்தோறும் காகத்திற்கு எள் கலந்த சாதம் இடுதல்
     .6.சனிக்கிழமை இரவுதோறும் சிறிது எள்லை ஒரு காகிதத்தில் முடிந்து தலைக்கு அடியில் வைத்து உறங்கி மறுநாள் சாதத்தில் கலந்து காகத்திற்கு இடுதல் ,
7. அன்னதானம் செய்தல்
8.ஆதரவு அற்றவருக்கு உதவி செய்தல்
9. துப்புரவு பணியாளர்களுக்கு உதவி செய்தல்
10 உடல் ஊனமுற்றோர்க்கு உதவி செய்தல்
11 அன்னதானம் செய்ய இயலாதவர்கள் மீன்களுக்கு பொறியை உணவாக அளிக்கலாம் ....
இவ்வாறு செய்வதின் மூலம் ஒருவர் ஏழரை மற்றும் அஷ்டமத்து சனியில் இருந்து தன்னை காத்து கொள்ளலாம் .
ஜாதகர் : நன்றி சனி பகவனே.
சனி : ஆகட்டும் . இதோ குரு பகவான் வந்து கொண்டு இருக்கிறார் ....அவரிடம் உரையாடவில்லையா ?
ஜாதகர் : கட்டாயமாக உரையாட வேண்டும் .

சனி பகவானுடன்  கலந்துரையாடல் நிறைவு பெற்றது.




சனி பகவானுடன் ஓர் கலந்துரையாடல்: பகுதி -6


சனி பகவானுடன் ஓர் கலந்துரையாடல்:
பகுதி -6
ஜாதகர் : அஷ்டமத்து சனி என்றால் என்ன ?
சனி : கோசாரத்தில் ஒருவருடைய ராசிக்கு எட்டாம் இடத்தில் நான் வரும் காலமே அஷ்டமத்து சனி எனப்படும் ?
ஜாதகர் : இதனால் என்ன பாதிப்பு ஏற்படும் ?
சனி : ராசிக்கு எட்டாம் இடத்தில் அமரும் நான் எனது முன்றாம் பார்வையாக பத்தாம் இடத்தை பார்ப்பேன் . எனவே இந்த காலகட்டத்தில் தொழிழில் முனேற்றம் இருகாது . தொழில் தொடுங்குவதில் சிக்கலும் , தடையும் இருக்கும் . வேலைக்கு செல்பவர்கள் தனது வேலையை இழக்க நேரிடலாம் .  வேலை பளு அதிகமாக  இருக்கும் .மேலும் ஏழாம் பார்வையாக இரண்டாம் இடமான தன , மற்றும் குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் பணம் ஈட்டுவதில் சிக்கல் ஏற்படும் . குடும்பத்தில் சண்டை , சச்சரவு வரலாம் . குடும்பம் அமைவதில் தடை ஏற்படும் . மேலும் நான் பத்தாம் பார்வையாக ராசிக்கு ஐந்தாம் வீட்டை பார்ப்பேன் . இதனால் குழந்தைகளால் மன நிம்மதி கெடும் .
ஜாதகர் : அது சரி சனி பகவனே , “ஏழரை சனி” என்றால் என்ன ?
சனி : சுமார் முப்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒருவரின் ஜன்ம ராசியை கடப்பேன் . ராசிக்கு பனிரெண்டாம் இடத்தில் இரண்டரை ஆண்டுகளும் , ஜன்ம ராசியல் இரண்டரை ஆண்டுகளும் , ராசிக்கு இரண்டாம் வீட்டில் இரண்டரை ஆண்டுகளும் நான் சஞ்சரிக்கும்  ஏழரை ஆண்டு காலமே “ ஏழரை சனி எனப்படும்”
ஜாதகர் : விரைய சனி என்றால் என்ன ?
சனி : ராசிக்கு பனிரெண்டாம் வீட்டில் நான் சஞ்சரிக்கும் இரண்டரை ஆண்டு காலத்தை விரைய சனி என்பார்கள் . இந்த கால கட்டத்தில் தான் ஒருவர் என்னுடைய பிடியில் இருப்பதை உணர்வார். விரைய சனி , பெயருக்கு தகுந்தார் போல் நான் கடுமையான விரயத்தை கொடுப்பேன். வருகின்ற வருமானத்தை விரயமாக்கி ஒருவரை திண்டாட செய்வேன்.
ஜாதகர் : “ஜென்ம சனி” என்றால் என்ன ?
சனி : ஒருவருடைய ஜென்ம ராசியில் நான் சஞ்சரிக்கும் இரண்டரை அண்டு காலத்தை ஜென்ம சனி என்பார்கள் . இந்த கால கட்டத்தில் ஒருவருக்கு மிகவும் கடுமையான பலன்களை செய்வேன் . குறிப்பாக நான் ஒருவருடைய ஜென்ம நட்சத்திரத்தில்  சஞ்சரிக்கும் காலத்தில் ஒருவருக்கு கடுமையான மன அழுதத்தை கொடுப்பேன் ..
ஜாதகர் : ஜன்ம சனி என்றால் அனைவரும் அதிர்ந்து போகிறார்களே, அப்படி என்னதான் செய்வீர்கள் ?
சனி : ஜென்ம ராசியல் அமரும் நான் முன்றாம் இடத்தை பார்த்து ஒருவரின் தைரியத்தை கெடுப்பேன் . சரியான முடிவு எடுக்க முடியாமல் ஒருவரை திணற செய்வேன் . ஏழாம் வீட்டை பார்த்து கூட்டு தொழிலை கெடுப்பேன் . களத்திரத்தை கெடுப்பேன் . பத்தாம் வீட்டை பார்த்து தொழிலை கெடுப்பேன் .  பணி இடை நீக்கம் போன்றவற்றை கொடுப்பேன்ஏழை , பணக்காரர் என்று பேதம் பார்க்காமல் அவரவரின் கர்ம வினை கேற்ப ஜென்ம சனியில் நான் தண்டனையை கொடுப்பேன் . ஜன்ம சனியின் போது ஒருவர் வாய்விட்டு அழும்படியாக கடுமையான துன்பத்தை கொடுப்பேன் . வயதிர்கேற்றவாரு ஒருவருக்கு கடுமையான மன அழுத்தத்தை கொடுப்பேன் . அதாவது தீராத வியாதி, காதல் தோல்வி ,கணவன் மனைவி பிரச்சினை , வேலையின்மை , தொழிழில் நஷ்டம் , வாகன விபத்து , விவாகரத்து , அசுப விரயம் , பிள்ளைகளால் மன நிம்மதி இன்மை , நெருங்கிய உறவினர் மரணம் , வருமானமின்மை , அவமானம் , தீராத கடன் , எதிரியால் பிரச்சினை, வீட்டிற்கும் காவல் நிலையத்திற்கும் அலைதல், நீதி மன்றத்தில் அலைதல் , மருத்துவமனையில் அலைதல் ,படிப்பில் தடை ,  திருமண தடை , கடுமையான மன அழுத்தம்,  போன்றவற்றை கொடுப்பேன். ஆகமொத்தம் இந்த காலகட்டத்தில் ஒருவரை கசக்கி பிழிவேன்.
ஜாதகர் : ஏழரை சனியின் போது வாழ்கைக்கு தேவையான பாடத்தை நீங்கள் கற்று கொடுகிறீர்கலாமே? இது உண்மையா ?
சனி : உண்மைதான் . ஏழரை சனியின் போது ஒருவருக்கு பணம் என்றால் என்ன என்பதை புரியவைப்பேன் , உண்மையான நண்பர்கள் யார் என்பதை அறியவைபேன் , பாசமுள்ள உருவுகள் யார் , பசு தோல் போர்திய புலி யார் என்பதையும் தெரிய வைப்பேன் . சுருக்கமாக சொன்னால் வாழ்க்கைக்கு தேவையான பாடத்தை கற்றுகொடுக்கும் ஆசானாக இந்த கால கட்டத்தில் செயல்படுவேன் .
ஜாதகர் : “பாத சனி” என்றால் என்ன ?
சனி : ஒருவரின் ஜென்ம ராசியை கடந்து ராசிக்கு இரண்டாம் இடத்தில் நான் சஞ்சரிக்கும் இரண்டரை ஆண்டு காலம் பாத சனி எனப்படும் . இந்த  கால கட்டத்தில் என்னுடைய தாக்கம் சிறிது சிறிதாக குறையும்.

கலந்துரையாடல் தொடரும் ....


சனி பகவானுடன் ஓர் கலந்துரையாடல்: பகுதி -5


சனி பகவானுடன் ஓர் கலந்துரையாடல்:
பகுதி -5
ஜாதகர் : சனி பகவனே உங்களுடைய “காரகத்துவங்களை” விளக்க முடியுமா ?
சனி : தாராளமாக விளக்குகிறேன். அதாவது ,
“வியாதி, கடன் , ,மனக்கவலை,தொல்லைகள் ,ஆயுள் , பொய்பேசுதல் ,அழுக்கு மற்றும் கிழிந்த  ஆடை , கருப்பு நிறம் , இரும்பு , உடல் ஊனமுற்றோர், கீழ் நோக்கிய பார்வை ,விவசாயம் ,சாலை நிர்வாகம் ,எலும்புகள், அருவருப்பான முடி, பயம் ,எருமை , திருட்டு, கல்நெஞ்சம். சோம்பல் , தாழ்வு மனப்பான்மை , கருநிற தானியங்கள்”,   முதலியவற்றிற்கு நான் காரகம் வகிப்பவன் .( உத்திர காலமிர்தம் பக்கம் 166)
ஜாதகர் : நீங்கள் தொழில் ஸ்தானதொடு தொடர்பு கொள்ளும்போது எவ்வகையான தொழிலை அமைத்து கொடுப்பீர்கள் ?
சனி : நான் ஒருவருடைய ஜாதகத்தில் நேர்வலு அடைந்து இருந்தால் ஒருவரை மிக நுட்பமான தொழிலை செய்ய வைப்பேன் . ஒருவர் சிறந்த மெகானிக்காக இருக்கிறார் என்றால் கட்டாயமாக அவருடைய ஜாதகத்தில் நான் நேர்வலு பெற்று இருப்பேன் . மேலும் விவசாயத்திற்கு காரகம் வகிப்பவனும் நானே . நான் நேர்வலு அடைந்தால்  கழிவறை சுத்தம் செய்தல், சாக்கடை அள்ளுதல் , குப்பைகள் அள்ளுதல், ஆநாதை விடுதி நடத்துதல் , மூட்டை சுமத்தல் , கல் குவாரியில் வேலை செய்தல், கூலி வேலை செய்தல் . நீச திரவத்தின் (பெட்ரோல், டீசல்)  மூலம் வருமானம் போன்ற தொழிலை அமைத்து கொடுப்பேன் . ஒருவேளை நான் பாபதுவமாக இருந்து தொழில் ஸ்தானதோடு தொடர்பு கொண்டால் மேற்கண்ட தொழிலின் மூலம் தீமையை செய்வேன் . ( ஐயா ஆதித்ய குருஜியின் “ ஜோதிடம் எனும் தேவரகசிம்- பகுதி – 2- பக்கம் -64 )
ஜாதகர் : அது சரி , நீங்கள் சுபதுவமாக தொழில் ஸ்தானதொடு தொடர்பு கொள்ளும்போது எவ்வகையான தொழிலை அமைத்து கொடுப்பீர்கள்?
சனி : நான் சுபதுவமாக இருக்கும்பொழுது என் சுப வலுவிற்கேர்ப ஒருவரை மக்களிடம் தொடர்பு கொள்ளும் பணியை கொடுப்பேன் . அதாவது ஊராட்சி மன்ற  உறுப்பினர், கவுன்சிலர், கிராம நிர்வாக அலுவலர் போன்ற பணியை கொடுப்பேன் . மேலும் நான் குருவுடன் இனைந்து மிகவும் சுபத்துவமாக இருந்து லக்கினத்தின்  இரண்டாம் இடம் என்று சொல்லகூடிய வாக்கு ஸ்தானத்தை தொடர்பு கொள்ளும் போது ஒருவரை பொய் சொல்லி பிழைக்கும் தொழிலை செய்ய வைப்பேன் . அது என்ன தெரியுமா? அது தான் வக்கீல் தொழில் மற்றும் மார்க்கெட்டிங்.
ஜாதகர் : நீங்கள் சுபதுவமாக லக்கினத்தை தொடர்பு கொள்வதற்கும் , பாபதுவமாக லக்கினத்தை தொடர்பு கொள்வதற்கும் , வக்கிரம் பெற்று லக்கினத்தை தொடர்பு கொள்வதற்கும் ஏதேனும் வித்தியாசம் உள்ளதா?
சனி : நிச்சயமாக உள்ளது . நான் ஆன்மீக கிரகமான குரு அல்லது கேதுவின் தொடர்பு பெற்று லக்கினத்தை அல்லது லக்கினாதிபதியை அல்லது  ராசியை தொடர்பு கொள்ளும் போது ஒருவரை சிறந்த சிவ பக்தனாக்குவேன். ஆன்மீகத்தில் மிகுந்த தேடலை கொடுப்பேன் . ஆண்ட சராசரத்தின் சூட்சமத்தை அறிய வைப்பேன் . தன்னை அறியசெய்து சிவ நிலையை அடைய வைப்பேன் .
நான் பாபதுவமாக லக்கினத்தை அல்லது லக்கினாதிபதியை  தொடர்பு கொண்டால் ஒருவரை பிடிவாதகாரராகவும், தாழ்வு மனப்பான்மையோடு இருப்பவராகவும் , சுயநலவாதியாகவும், பிறருடைய துன்பத்தில் இன்பம் காண்பவராகவும் இருக்க செய்வேன்.
நான் வக்கிரம் பெற்று லக்கினத்தை தொடர்பு கொள்ளும்போது ஒருவருக்கு மந்த புத்தியாகவும் , பிறர் சொல்வதை புரிந்து கொள்ள முடியாதவராகவும் , இவர் சொல்வதை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாமல் போகும் . அதாவது கருத்து பரிமாற்றத்தில் ஒரு வகையான தடங்கல் இருக்கும் .

கலந்துரையாடல் தொடரும் ......

சனி பகவானுடன் ஓர் கலந்துரையாடல்: பகுதி -4


சனி பகவானுடன் ஓர் கலந்துரையாடல்:
பகுதி -4
ஜாதகர் : சனி பகவானே தாங்கள் எந்த லக்கினத்திற்கு மிகுந்த யோகம் செய்வீர்கள் ?
சனி : துலா, லக்கினத்தவருக்கு நானே பரிபூர்ண யோகாதிபதி . நான் “சுபதுவம்” “சூட்சமவலு” அடையும் பட்சத்தில் என்னுடைய தசையில் மிகுந்த யோகம் செய்வேன். ரிஷப லக்கினத்தவருக்கு பாக்கியாதிபதியும் நானே, பாதகாதிபதியும் நானே . மிதுன, கன்னி லக்கினதவருக்கு திரிகோணாதிபதியாகவும் , ரோகாதிபதி மற்றும் அஷ்டமாதிபதியாகவும் வருவதால் என்னால் முழு யோகத்தை வழங்கிட முடியாது .
ஜாதகர் : தங்களுடைய மகர , கும்ப, லக்கினங்களுக்கு நன்மை செய்ய மாட்டீர்களா?
சனி : நன்மை செய்வேன். இருப்பினும் மகர லக்கினதிற்கு மாரகாதிபதியாக வருவதாலும், கும்ப லக்கினத்திற்கு விரயாதிபதியாக வருவதாலும் என்னால் முழு யோகத்தையும் செய்ய முடியாது.
ஜாதகர் : நீங்கள் ரிசப லக்கினத்திற்கு மறைந்து உச்சம் அடைவதின் சூட்சமம் என்ன ?
சனி : முழு பாவ கிரகமான நான் ஒருவர் ஜாதகத்தில் நேரடியாக வலு பெறாமல் மறைமுகமாக வலுபெற வேண்டும் . மேலும் ரிஷப லக்கினதவருக்கு நான் பாதகாதிபதியாக வருவதால் நான் மறைவது நன்மை தானே .
ஜாதகர் : நீங்கள் கேந்திரத்தில் இருந்தால் நன்மையா ? திரிகோணத்தில் இருந்தால் நன்மையா ?
சனி : நான் மறைந்து சுபத்துவம் அடைந்தால் தான் நன்மை . நான் ஒரு பாவ கிரகமாக இருப்பதால் கேந்திரத்தில் இருக்கலாம் . ஆனால் நான் திரிகோணத்தில் இருக்க கூடாது . நான் ஒரு வேலை திரிகோணாதிபதியாக வந்தால் அந்த திரிகோண ஸ்தானத்திற்கு மறைய வேண்டும் . அப்பொழுது தான் நன்மை செய்வேன் .
ஜாதகர் : நீங்கள் சுபதுவம் அடையாமல் இருந்தால் உங்களின் தசை எவ்வாறு இருக்கும் ?
சனி : நான் சுபத்துவம் இன்றி தசை நடத்தினால் “ஆறாம் அதிபதி” போலவே பலன் செய்வேன் . அதாவது எனது காரகத்துவமான கடன் , நோய், எதிரியை கொடுப்பேன் .
ஜாதகர் : உங்களுடைய எதிரி யார் ?
சனி : என்னுடைய பரம எதிரி சூரியனும் , சந்திரனும் தான் . எனவே கடக லக்கினதவருக்கு நான் அஷ்டமாதிபதியாக வருகிறேன் . சிம்ம லக்கினதவருக்கு ஆறாம் வீட்டு அதிபதியாக வருகிறேன் . இவ்விரு லக்கினகாரர்களுக்கு என்னுடைய தசை வந்தால் நான் அவர்களை வாட்டி, வதக்கி, கசக்கி,பிழிவேன்.
ஜாதகர் : கடக , சிம்ம லக்கினத்தவருக்கு தாங்கள் எந்த பாவகத்தில் இருந்தால் நன்மை செய்வீர்கள் ?
சனி : நான் மூன்று மற்றும் பதினொன்றாம் பாவகத்தில் நட்பு நிலையல் இருந்தால் தீமையை குறைத்து  செய்வேன் .
ஜாதகர் : நீங்கள் மட்டும் அல்ல , பொதுவாக எந்த அவயோக கிரகங்களும் மூன்று மற்றும் பதினொன்றாம் இடங்களில் இருந்தால் நன்மை செய்வார்கள் என்று சொல்கிறார்களே இதன் சூட்சமம் என்ன ?
சனி : ஒரு லக்கினத்தின் மூன்று மற்றும் பதினொன்றாம் இடங்களில் அந்த லக்கினத்தின் யோகர்களின் நட்சத்திரம் அமைந்து இருக்கும். எனவே இலக்கின யோகாதிபதிகளின் சாரத்தில் இருக்கும் இலக்கின அசுபர்கள் தீமை செய்ய முடியாது, அல்லது தீமையை குறைத்து செய்யும். இதற்கு சாரம் கொடுத்த கிரகம் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.
கலந்துரையாடல் தொடரும் ......


சனி பகவானுடன் ஓர் கலந்துரையாடல்: பகுதி -3


சனி பகவானுடன் ஓர் கலந்துரையாடல்:
பகுதி -3
ஜாதகர் : நீங்கள் உடல் உழைப்பிற்கு காரகம் வகிப்பிவர் . அப்படியிருக்க உங்களால் ஒரு சொகுசான வாழ்கையை தர முடியுமா ?
சனி : ஒருவருடைய ஜாதகத்தில் நான் சுப கிரகங்களின் தொடர்பு இன்றி நேர் வலு அடைந்து இருந்தால் , ஜாதகரை கடுமையாக உழைக்க வைப்பேன் . நான் சுபத்துவம் அல்லது உச்ச பங்கம் அடைந்து இருந்தால் மட்டுமே நன்மை செய்வேன் .
ஜாதகர் : உச்ச பங்கம் என்றால் என்ன ?
சனி : நான் உச்சம் பெற்று வக்கிரம் அடைந்தால் எனது வலிமையை இழப்பேன் . இதுவே உச்ச பங்கம் எனப்படும் .
ஜாதகர் : எந்த சுப கிரகத்தின் தொடர்பை நீங்கள் பெரும்பொழுது நன்மையை கூடுதலாக செய்வீர்கள் ?
சனி : பொதுவாக சுக்கிரன் , தனித்த புதன் , ஒளி பொருந்திய சந்திரனின் தொடர்பை பெறும்போது நான் “சுபத்துவம்” அடைந்தாலும், வலிமை பெற்ற  குரு பகவானின் தொடர்பை நான் பெறும்போது கூடுதலாக சுபத்துவம் அடைவேன் .
ஜாதகர் : அசுர குருவான சுக்கிரனை காட்டிலும் உமக்கு தேவ குருவான பிரகஸ்பதியை தான் மிகவும்  பிடிக்குமோ?
சனி : சுக்கிரர் எனக்கு நெருங்கிய நண்பர் . தேவகுருவானவர் எனக்கு நட்பும் இல்லை , பகையும் இல்லை எனக்கு சமமனாவர் . அது மட்டும் இல்லமால் எனக்கு மிக  அருகில் இருப்பவர். சுக்கிரரோ எனக்கு மிகவும் தொலைவில் இருப்பவர் . எனவே தேவ குருவின் தொடர்பை நான் பெறும்போது மிகவும் சுபத்துவம் அடைகிறேன்.
ஜாதகர் : அப்படியெனில் முழு பாவ கிரகமான உங்களிடம் இணையும் குரு பகவானின் நிலைமை என்னவாகும்?
சனி : நீ கூறுவது உண்மைதான் . குரு பகவான் தனது பூரண ஒளியால் என்னை சுபத்துவபடுத்துவதால் அவர் தனது ஒளியை இழப்பபார். இதனால் அவரது காரகத்துவம் பாதிக்கப்படும் .
ஜாதகர் : அது சரி . தாங்கள் குரு பகவானுடன் இணைந்தால் “தோஷம்” என்கிறார்களே ? இதனை விளக்க முடியுமா ?
சனி :  தோஷம் என்பது மனிதனால் ஏற்படுத்தப்பட்ட ஒன்று  ஆகும். உண்மையில் நான் குரு பகவானிடம் இணையும் தூரம் அதாவது பாகை அளவு பொறுத்தே அவர் தனது வலிமையை இழப்பார். ஒரு வேலை நாங்கள்  இருவரும் மிகவும் நெருங்கி இருந்தால் குரு பகவான் தன்னுடைய காரகத்துவமான குழந்தை பாக்கியத்தை கொடுக்கும் வலிமையை இழப்பார். இதனையே தோஷம் என்கிறார்கள் . உண்மையை சொல்லப்போனால் இந்த நிலையல் ஒருவருக்கு என்னுடைய தசா வரும்பொழுது குருவை போல் நான் பெரும் யோகம் செய்வேன் . குரு பகவானிடம் நான் பரித்த காரகதுவத்தை எனது தசையில் நானே கொடுப்பேன் .
ஜாதகர் : நீங்கள் சந்திரனின் தொடர்பை பெற்றால் “புனர்பூ” தோஷம் என்கிறார்களே . இதனை விளக்க முடியுமா ?
சனி : தோசத்தை மட்டும் பற்றியே பேசுகிறாயே. யோகத்தை பற்றியும் பேசலாமே .
ஜாதகர் : எனக்கு புரியவில்லை ?
சனி : பொதுவாக நான் சந்திரனின் தொடர்பை பெறும்போது நான் சுபத்துவம் அடைந்து சந்திரன் தனது ஓளிதிறனை இழப்பார் . இத்தகைய சூழலில் சந்திரனை யோகதிபதியாக கொண்டவர்கள் எந்த யோகத்தையும் அனுபவிக்க முடியாது . எனவே இவர்களக்கு சந்திரனால் தோஷம் ஏற்படவே இதனை புனர்பூ தோஷம் என்கிறார்கள் . மாறாக சந்திரனின் ஒளியை பெற்ற நான் மிகவும் வலு பெற்று என்னை யோகதிபதியாக கொண்டவர்களுக்கு மிகுந்த நன்மை செய்வேன் . எனவே இவர்களக்கு இது புனர்பூ யோகமாக மாறி அபரிவிதமான நன்மை செய்யும். புனர்பூ தோசத்திற்கும் , புனர்பூ யோகத்திற்கும் வித்தியாசம் புரிகிறதா ?

சனி பகவானுடன் ஓர் கலந்துரையாடல்: பகுதி -2


சனி பகவானுடன் ஓர் கலந்துரையாடல்:
பகுதி -2
ஜாதகர் : தங்களை அனைவரும் சனீஸ்வரர் என்று அழைக்கிறார்களே. நவக்ரகங்களில் தாங்கள் மட்டும் “ஈஸ்வர” பட்டம் பெற்றுள்ளீர்களா?
சனி : இந்த அகிலத்தில் ஈஸ்வரர் என்பவர் ஒருவர் மட்டுமே . அவரே எங்களை ஆளும் பரமேஸ்வரர் . அப்படியிருக்க நான் எப்படி ஈஸ்வரராக முடியும் . சமஸ்கிரதத்தில் என்னை “சனைச்சர” என்று அழைப்பார்கள். “மெதுவாக நகர்பவர்” என்பது இதன் அர்த்தம் ஆகும் . கால போக்கில் சனைச்சர என்ற சமஸ்கிரத சொல் மருவி தமிழில் “சனிஸ்வரர்” என்று ஆயிற்று.
ஜாதகர் : தங்களின் ஆட்சி , உச்ச , மூலதிரிகோண வீடுகள் யாவை ?
சனி : மகரம் என்னுடைய ஆட்சி வீடு . கும்பம் என்னுடைய மூல திரிகோண வீடு . துலாம் என்னுடைய உச்ச வீடு .
ஜாதகர் : தாங்கள் எங்கு “திக் பலம்” அடைவீர்கள்?
சனி : நான் லக்கினதிற்கு ஏழாம் இடமான மேற்கு திசையில் திக் பலம் பெறுவேன், அதற்கு ஏழாம் இடமான லக்கினத்தில் திக் பலம் இழப்பேன் .
ஜாதகர் : தாங்கள் எந்த ராசியல் நீசம் அடைவீர்கள்?
சனி : நான் உச்சம் அடையும் துலாம் ராசியிலிரிந்து ஏழாம் ராசியான மேஷத்தில் நீசம் அடைவேன்.
ஜாதகர் : தங்கலால் எதாவது யோகம் உண்டா?
சனி : நான் கேந்திரத்தில் ஆட்சி அல்லது உச்சம் பெற்றால் “சச” யோகத்தை கொடுப்பேன்?
ஜாதகர் : ஒருவர் ஜாதகத்தில் தாங்கள் நேரடியாக வலுபெறக்கூடாது என்கிறார்களே , இது உண்மையா?
சனி : நான் நேரடியாக ஆட்சி அல்லது உச்சம் அடைந்தால் ஒருவரை உடல் வருத்தி வேலை செய்ய வைப்பேன் . சொகுசான வாழ்க்கையை என்னால் தர முடியாது .
ஜாதகர் : அப்படி எனில் நீங்கள் எப்பொழுது நன்மை செய்வீர்கள் ?
சனி : நான் “சுபத்துவம்” அடையும்போது மட்டும் நன்மை செய்வேன் ?
ஜாதகர் : “சுபத்துவம்” என்றால் என்ன ?
சனி : நான் ஒரு ஒளி அற்ற கிரகம் . கிரகங்களின் ஒளி திறனுக்கு எற்றவாரு மகாகவி காளிதாசர் கிரக களா பரிமாண எண் கொடுத்துள்ளார் . அதன் படி அவர் எனக்கு கொடுத்த மதிப்பெண் 1 ஆகும் . இதிலிருந்தே நான் ஒரு ஒளி அற்ற கிரகம் என்பது உமக்கு புரிந்து இருக்கும் . ஒளியற்ற கிரகமான நான் ஒளி பொருந்திய சுப கிரகங்களான குரு, சுக்கிரன் , தனித்த புதன் , ஒளி பொருந்திய சந்திரன்  ஆகியோரிடம் ஒளியை கடனாக பெறும் நிகழ்விற்கே “சுபத்துவம்” என்று பெயர் .
ஜாதகர் : அது சரி நீங்கள் எப்படி  சுபத்துவம் அடைவீர்கள் ?
சனி : ஒளி பொருந்திய சுப கிரகங்களின் இணைவை ராசியிலோ அல்லது அம்சத்திலோ  பெறும்போதும் , அவர்களின் பார்வையை பெறும்போதும் , ராசியிலோ அல்லது அம்சத்திலோ அவர்களின் வீட்டில் அமரும்போதும் , அவர்களின் சாரத்தை பெற்று சாரநாதன் நல்ல நிலையல் இருக்கும்போதும், கேதுவுடன் இணையும்போதும் நான் சுபத்துவம் அடைவேன் .
ஜாதகர் : நீங்கள் சந்திரனுடன் இணையும் போது அல்லது அவருடைய பார்வை பெறும்போது  “புணர்பூ” தோஷம் என்கிறார்களே இதனை விளக்க முடியுமா ?
சனி : இதனை நாளை விளக்குகிறேன்.....
கலந்துரையாடல் தொடரும் ......


சனி பகவானுடன் ஓர் கலந்துரையாடல்: பகுதி : 1


சனி பகவானுடன் ஓர் கலந்துரையாடல்:
பகுதி : 1
ஜாதகர்: வணங்குகிறேன் சனி பகவனே .
சனி : மற்றவர்கள் தான் அறியாமையால் என்னை வணங்குகிறார்கள். நீயுமா என்னை வணங்குகிறாய் ? அதுவும் என் முன் நின்று ?
ஜாதகர் : தாங்கள் தான் எனது லக்கினாதிபதி ஆயிற்றே . வணங்கினால் என்ன தவறு ?
சனி : நான் லக்கினாதிபதி ஆனாலும் என்னுடைய பார்வை உமக்கு நன்மை செய்யயாது . நான் முழுமையான பாவ கிரகம் . நான் பார்க்கும் இடங்கள் நலிவடையும் . இது தெரியாமல் சிலர் கோவிலில் என் சிலை முன் நின்று பிரார்த்தினை செய்கிறார்கள் .
ஜாதகர் : உங்களை வணங்க கூடாதா?
சனி : என்னை வணங்குபவர்களுக்கு கொடுக்க என்னிடம் என்ன உள்ளது . நோய் , கடன் , எதிரியை தவிர ....
ஜாதகர் : அப்படியெனில் உங்கள் மனதை குளிர்விக்க நாங்கள் யாரை வணங்க வேண்டும்?
சனி : என்னை வணங்குவதை நிறுத்திவிட்டு என் குருவான கால பைரவரை வணங்கலாம் . என்னை நேரடியாக வணங்கினால் கடன் , நோய் , துக்கம் , துயரம் போன்றவை மட்டுமே கிடைக்கும் .
ஜாதகர் : உங்களை கண்டால் அனைவரும் நடுங்குகிறார்களே. இதற்கு என்ன காரணம் ?
சனி : நவ கிரகங்களில் நானே முழுமையான பாவ கிரகம். கால புருஷனின் கர்மஸ்தானம் என்னுடைய வீடு. இதிலிருந்தே நான் கர்மாதிபதி என்பதை நீ அறியலாம் . நீதி தவறாமல் நடு நிலையோடு அவரவர் செய்த முன்ஜென்ம கர்மவினைகேற்றவாரு நான் தகுந்த தண்டனை கொடுப்பேன் .
ஜாதகர் : உங்களை “மந்தன்” என்று அழைக்கிறார்களே? இதற்கு என்ன காரணம் ?
சனி : நவ கிரகங்களில் ராசி மண்டலத்தை மெதுவாக கடப்பவன் நான் மட்டுமே . ஒரு ராசியல் சுமார் இரண்டு அரை ஆண்டு  காலம் தங்குவேன். நான் விரைவாக ராசி மண்டலத்தை கடந்தால் மக்களின் நிலைமை என்ன ஆகும் ?  ஆகவே நான் மெதுவாக நகர்கிறேன் . எனவே என்னை மந்தன் என்று அலைகிறார்கள் .
ஜாதகர் : உங்கள் லக்கினமான மகர மற்றும் கும்பத்தில் ஜனித்தவர்கள் மந்த புத்தியோடு இருப்பார்களா?
சனி : மகரம் என்னுடைய சர வீடு . இந்த லக்கினத்தில் ஜனித்தவர்கள் பொதுவாகவே வேகமுடன் செயல்படுவார்கள் . கும்பம் என்னுடைய ஸ்திர வீடு . இந்த லக்கினத்தில் இருப்பவர்கள் பொதுவாக மிகவும் நிதானமாக செயல் படுவார்கள் . நான் சுபதுவம் இன்றி லக்கினத்தை தொடர்பு கொள்ளும்போது ஒருவர் மந்த புத்தியோடு இருப்பார்.
ஜாதகர் : முழு பாவ கிரகமான நீங்கள் நன்மை செய்வீர்களா?
சனி : நான் “சுபத்துவம்” மற்றும் “சூட்சம வலு” அடையும்போது மட்டும் நன்மை செய்வேன் .
ஜாதகர் : நீங்கள் எப்பொழுது “சூட்சம வலு” அடைவீர்கள் ?
சனி : நான் ஞான காரகனான கேதுவுடன் ராசியிலோ , அல்லது அம்சத்திலோ இணையும்பொழுது “சூட்சம வலு” அடைவேன் .

கலந்துரையாடல் தொடரும் ......